“ஜெயலலிதாவின் தொண்டர்கள் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” - டிடிவி தினகரன் பேட்டி!
ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
“தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு மாதத்தில் 150 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி மிகப் பெரிய வருத்தம் அளிக்கிறது. கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். 1998 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 30 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற உதவியாக இருந்தவர்கள் பாமகவினர். 2001 தேர்தலிலும் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தவர் ராமதாஸ்.
இதையும் படியுங்கள் :#ZIMvsIND – 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்தியா!
2009-ம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் மத்தியில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்தார். அதனால் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் எங்கிருந்தாலும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.