"அதிமுக விவகாரத்தில் அமித்ஷா தலையீடு இல்லை" - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "153 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தேன். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. திமுக அரசு அகற்றுவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது பல்வேறு நிலைபாடு. எனது டெல்லி பயணம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளது. தமிழக ஊடகங்கள் இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முகம் துடைப்பது எல்லாம் திரித்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மமா ?
அதிமுகவை பற்றி விமர்சனம் செய்வதற்கு அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் கிடையாது. முகத்தை மறைத்தேன் என ஸ்டாலின் பேசி உள்ளார். முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இமை அளவு கூட எனக்கு கிடையாது. ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியானது அல்ல. உள்துறை அமைச்சரை சந்தித்து தேசத்துக்காக பாடுபட்ட தலைவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மனு வழங்கினேன். அமித்ஷா இவரை அழைத்து பேசினார், அவரை அழைத்து பேசினார். இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும். அமித்ஷா உள்துறை பிரச்சனைகளில் நுழைய மாட்டேன் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். யாரையும் அழைக்கவில்லை
அவரும் சொல்லிவிட்டார், நானும் சொல்லிவிட்டேன், இதோடு முடிந்து விட்டது. கட்சி கட்டுப்பாட்டை மீறி சில பேர் செயல்படுகிறார்கள். கட்சி கட்டுப்பாட்டை மீறினால் அவர்கள் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். டிடிவி என் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
நான் முகமூடி அணிந்து செல்லவில்லை. டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினராக நீக்கப்பட்ட ஆதாரங்களை காண்பித்து விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை சென்னை பக்கமே டிடிவி வரவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என கூறிய பிறகு தான் டிடிவி இதுபோல் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது வெளிப்படையானது. கார் இல்லாததால் கிடைக்கும் காரில் செல்ல வேண்டியது தான். ஸ்டாலின் வெளிநாட்டிற்கு செல்லும் போது இப்படித்தான் கேள்வி கேட்டீர்களா? விவசாயி ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆக இருந்தால் என்னென்ன இன்னலை சந்திப்பது என்பதற்கு நானே உதாரணம். நீட் தேர்வு ரத்து ஏமாற்று வேலை.
திமுகவினர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் எல்லாமே தெரியும். கவர்ச்சிகரமாக பேசி பொய்யான அறிவிப்பை வெளியிட்டு வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு காலமாக நீட் தேர்வை ரத்து செய்யவோம் எனக்கூறி 25 உயிர்கள் பறிபோய் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.