“அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்...” - தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!
கம்பத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா தனது தமிழ்நாட்டு பயணத்தை எதற்காக ரத்து செய்தார் என்பது தெரிகிறது என கம்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரான திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து கனிமொழி கம்பம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,
“இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா ஏன் தனது தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்தார் என தெரிகிறது. பாஜகவிற்கு ஒரு ஓட்டு கூட தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வராது என்பது நன்கு தெரிகிறது. மாதத்திற்கு 8 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தான் உள்ளார். அடுத்த வாரம் கூட பிரதமர் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார்.
மக்களிடையே மத ரீதியாக, இன ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்துவது பாஜக தான். உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை எட்டி கூட பார்க்காத பிரதமர் மோடி, இப்போது தேர்தல் வந்ததும் தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறார். டிடிவி தினகரன் மீது வழக்குகள் உள்ளதால் தான், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை இவை எல்லாம் தான் பிரதமர் மோடியின் குடும்பம்”
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.