“இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” - ஆதவ் அர்ஜுனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“வக்ஃபு திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமிய மக்கள் மட்டும் அல்லாமல் எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மற்ற சில சமூக மக்களும் பாதிக்கக் கூடாது என்ற காரணத்தினால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இஸ்லாமிய சமூகத்தினருக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மூத்த வழக்கறிஞர்களின் முக்கிய வாதத்தின் காரணமாக உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அரசியலமைப்பு காக்கப்பட்டுள்ளது. இன்றைய உத்தரவில், வக்ஃபு சொத்துக்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல பராமரிக்கப்படும், நிர்வாகத்தில் மாற்றமும் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமூகத்தினருக்காக தமிழக வெற்றி கழகம் என்றும் போராடும் என்பதன் வெளிப்பாடு தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்ட போராட்டமாகும். இஸ்லாமியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களின் பராமரிப்பை உறுதி செய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” என தெரிவித்தார்.