“தமிழ்நாடு புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் நானா?”... விளக்கமளித்த அண்ணாமலை!
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்றார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சுகளும் வெகுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,
“இதுபற்றி நான் தெளிவாக கூறியிருக்கிறேன். கிட்டத்தட்ட 2026ஆம் ஆண்டு எப்படி தேர்தலை அணுகப் போகிறோம் என்பதைப் பற்றி கூறியிருக்கிறோம். நான் மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவும் இல்லை. புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். என்னுடைய பணி என்றும் ஒரு தொண்டனாக தொடரும்" என்றார்.
மாநிலத் தலைவர் இல்லை என்றால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகிறதே என கேட்டதற்கு, “மத்திய அமைச்சராக என்னை அனுப்பி பேக் செய்து விடுவிங்க போல. நான் தமிழ்நாட்டில் சேவை செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்தார்.