For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

05:57 PM Mar 20, 2024 IST | Web Editor
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு  எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது
Advertisement

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதன்படி, வட சென்னை, தென் சென்னை, மதுரை, தேனி உட்பட 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (20.03.2024) மாலை 5.30 மணி அளவில் சென்னையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர்.

அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.

இதனை அடுத்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2011-ல் அதிமுக,தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சியம் இந்த கூட்டணி வெற்றி பெறும் எனக் கூறினார்.

Tags :
Advertisement