வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 20) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,
“செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.9.40 கோடி நிதி ஒதுக்கீடு. பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம். சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு. விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு "சி" "டி" பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. ஈரோடு கள்ளக்குறிச்சி தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.