பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள்! பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் பேட்டி!
பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடி வெற்றி பெற அமமுக ‘அணில்’ போல் செயல்படும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. அதோடு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி இறுதியான நிலையில் தொகுதி பங்கீடும் வெற்றிகரமாக நிறைவுற்று வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அதிமுக கூட்டணி விரைவில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகமான காமலாலயத்தில், இன்று (20.03.2024) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஒட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. எந்த இரண்டு தொகுதிகள் என்பது பாஜக அறிவிக்கும். தஞ்சாவூர் நான் பிறந்த மண், அங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளோம். அமமுக நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தான் விரும்புகிறார்கள். நாங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவில்லை. தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுக வாக்கு வங்கி அதிகம் உள்ளது. எங்கள் கூட்டணிக்கு அது வெற்றிக்கான பலத்தை கொடுக்கும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரதமர் மோடி வெற்றி பெற "அணில்" போல் செயல்படும். திமுகவின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.