"தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்" - ஆர்.பி.உதயகுமார்!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஜெயலலிதாவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் முகத்தில் முழிக்கக்கூடாது என நடவடிக்கை எடுக்கப்பட்டவர் தினகரன். ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஜெயலலிதா ஒதுக்கி வைத்தால் ஆண்டவனே ஒதுக்கி வைக்கும் நிலை தான்.
அதிமுக குறித்தும் தொண்டர்கள் குறித்தும் தினகரன் அவதூறு பரப்புகிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு பரப்புவதையே கடமையாக வைத்துள்ளார் தினகரன். பாதுகாப்பாற்ற சூழலில் அதிமுகவின் 2 கோடி தொண்டர்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இரட்டை இலையை மக்களிடத்தில் கொண்டு சென்று சாதனை படைத்தவர். மனோஜ் பாண்டியன் சட்ட ஞானம் கொண்டவர். அவர் திமுகவுக்கு சென்றதற்கு கூட எடப்பாடி தான் காரணம் என வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார்.
தினகரன் உடன் இருந்த செந்தில் பாலாஜி, மாரியப்பன் கென்னடி, உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்? உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள்.
அதிமுக கட்சியை அபகரிக்க முயன்றவர் டிடிவி தினகரன். அதிமுகவை ஆட்டைய போட பார்த்தவர் தினகரன். தினகரனின் பருப்பு எடப்பாடி பழனிசாமியிடம் வேகாது. அந்த இயலாமையின் காரணமாக இன்று ஏதேதோ பேசுகிறார் தினகரன். டிடிவி தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரோ என்ற கவலை தம்பிமார்களான எங்களுக்கு உள்ளது. 10 ஆண்டு காலம் ஒதுக்கி வைத்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதோ என்ற மிகப்பெரிய கவலை எங்களுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் தினகரனுக்கு என்ன வேலை, இவர் எதற்காக இதையெல்லாம் பேசுகிறார். வேதனை இயலாமை விரக்தி என்ற நிலைகளின் உச்சத்தில் டிடிவி தினகரன் உள்ளார். மக்கள் டிடிவி தினகரனையும், அமமுகவையும் தள்ளி வைத்து விட்டார்கள். தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம் என்று தெரிவித்துள்ளார்.