"இரு கட்சிகளுக்கும் வாக்களித்து கைகள் தேய்ந்து போனதுதான் மிச்சம்" - புதுக்கோட்டையில் அண்ணாமலை பேச்சு
புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
”70 ஆண்டு கால திராவிட அரசியலில், தமிழகமும் திமுகவும் ஒன்று எனும் பொய்யான தகவல்களை பரப்பி அரசியல் செய்து வருகின்றனர் .
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், சுதந்திரம் கிடைத்த உடன் கோட்டை கஜானாவை இந்திய அரசிடம் ஒப்படைத்தவர்கள். தேசியத்தின் பக்கம் நின்றவர்கள் புதுக்கோட்டை மக்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புதுக்கோட்டையை மாவட்டமாக அறிவித்தபோது, புதுக்கோட்டை மன்னர் அரண்மனையையே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய மன்னருக்கு இன்று வரையிலும் மணி மண்டபம் கட்ட முடியாத நிலை உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களுக்கு அருங்காட்சியம் கட்டப்படும் என தெரிவித்தார். ஆனாலும் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கும் வாக்களித்து கைகள் தேய்ந்து போனதுதான் மிச்சம்
புதுக்கோட்டையில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட கிடையாது. புதுக்கோட்டையில் நாடாளுமன்ற தொகுதி கொண்டு வர வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.
இந்த யாத்தரியின் வெற்றியானது என்னுடையதோ அல்லது எந்த ஒரு தனி மனிதனுடைய வெற்றியோ கிடையாது. இது மக்களாகிய உங்களின் வெற்றி. புதுக்கோட்டையில் இருந்து ஒரு சாமானியன் என்றைக்கு பிரதமர் ஆகிறாரோ, அன்றைக்கு 'என் மண் என் மக்கள் யாத்திரை' வெற்றி பெற்றது".
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணமலை உரையாற்றினார்.