மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு... காங். 17 இடங்களில் போட்டி...
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மும்பை, புனே, நாக்பூர், தானே போன்ற பெரு நகரங்களை அடக்கியது மகாராஷ்ட்ரா. மகாராஷ்ட்ராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளை கைப்பற்ற மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தனது கூட்டணி கட்சிகளுடனும், பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியும் போராடி வருகின்றனர்.
மகாராஷ்ட்ராவில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக வரும் 19ம் தேதி 5 தொகுதிகளுக்கும், 26ம் தேதி 7 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 11 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 11 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆளுங்கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அவர்களை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியோருடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து, பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில், தொகுதிப் பங்கீடு இன்று (ஏப். 9) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) 10 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மகாராஷ்ட்ராவில் இந்தியா கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
மகாராஷ்ட்ராவின் முக்கிய கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளில் உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ள சூழலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையடுத்து அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.