பல சிரமங்களுக்கு பிறகு கிடைத்த அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்ததாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இறப்பு தொடர்பான ஆவணங்கள் எதுவும் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் இறப்பு சான்றிதழ் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது என அஜித்குமாரின் சகோதரர் புகார் அளித்துளார்.
அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து இறப்பு சான்றிதழ் வழங்கிட வேண்டுமென இரண்டு மாவட்ட நிர்வாகத்திடமும் அஜித்குமார் குடும்பத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்புவனம் காவல்துறை, அஜித்குமார் தொடர்பான இறப்பு அறிக்கையை சுகாதாரத் துறைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளது.
அதில் அஜித்குமார் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அஜித் குமார் குடும்பத்தினர் அளித்த மனுவை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உடனடியாக பெற்று தற்போது அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.