#Manipur ஆளுநராக அஜய் குமார் பல்லா பதவியேற்பு!
மணிப்பூரின் 19வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அசாம் மாநில ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூரின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை வகித்து வந்தார். இதனையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய ஆளுநராக நியமித்தார்.
இதையும் படியுங்கள் : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!
இந்த நிலையில், மணிப்பூரின் 19வது ஆளுநராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா இன்று (ஜன. 3) அம்மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜய் குமார் பல்லா மத்திய உள்துறை செயலராக அதிக காலம் பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்றவர்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார். மேலும், 1984ல் அசாம்-மேகாலயா கேடரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். முன்னதாக, நேற்று இம்பாலுக்கு வந்த அஜய் குமார் பல்லாவை ஆளுநர் மாளிகையில் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் வரவேற்பு அளித்தார்.