டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - டீசல் வாகனங்கள் நுழைய தடை!
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 349 ஆக இருந்தது. இது நேற்று 440-ஐ தாண்டியது. 349 அளவில் இருக்கும்போது நகரில் 3-ம் தரநிலை கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தி உள்ளது.
நேற்று காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து 4-ம் தரநிலை கட்டுப்பாடுகளை காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது. அதனபடி, மண் அள்ளுதல், தரையைத் தோண்டுதல், குவியல்கள் அமைத்தல், கட்டுமானப்பணிகள் மற்றும் கட்டுமானங்களை இடித்தல் போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளன. மேலும் செங்கல் தொழில், சூடான கலவை ஆலைகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டுத் தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து நடுத்தர மற்றும் கனரக சரக்கு டீசல் வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் பாதி பேரை வீட்டில் இருந்து படிக்க, பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.