எய்ம்ஸ் செங்கல் விவகாரம் - எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி
எய்ம்ஸ் செங்கல் தொடர்பாக தன்னை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், இன்று தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
அதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
“மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்தால், மாதம் 2 முறை நான் வந்து உங்களோடு தங்கி, தொகுதி பிரச்னையை அண்ணாதுரையுடன் இணைந்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். இது என்னுடைய வாக்குறுதி.திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். ஆம், எங்களின் தூக்கம் போய்விட்டது. உங்களை ஆட்சியில் இருந்து அகற்றி வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவது இல்லை. தூங்காமல் நாங்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போகிறோம். பிரதமர் மோடி நாடகமாடுகிறார். சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாகக் கூறும் மோடி, தேர்தலுக்கு பின் 500 ரூபாய் உயர்த்துவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாயாக சிலிண்டர் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிருக்கு உரிமைத்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இதையும் படியுங்கள் : சமூக ஊடகங்களில் 14 வயதுக்குட்பட்டோர் கணக்கு வைத்திருக்க தடை – மசோதாவுக்கு ஃபுளோரிடா ஆளுநர் ஒப்புதல்!
நான் எப்போதும் கல்லை தூக்கி காட்டுவதாக இபிஎஸ் விமர்சிக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்வரை இந்த கல்லை நான் கொடுக்கமாட்டேன். நான் கல்லை காட்டுகிறேன். ஆனால் அவர் பல்லை காட்டுகிறார். மிக்சாம் புயலின்போது சென்னை முழுவதும் மூழ்கியது. அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக பணியாற்றினார்கள். ஆனால், பிரதமர் மோடி எதுவும் கண்டுகொள்ளவில்லை.”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.