"அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்" - நடிகை கௌதமி பேட்டி!
கன்னியாகுமரியில் நடைபெற்ற சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியில் நடிகை கௌதமி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "நடிகர் விஜயின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தெரியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்கள் பிர்ச்சினைகளை பேசும் பயணமாக உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சி இருக்கும். கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும். அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை திரைத்துறையினர் பெரிதாக்கியதும், திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை பேசவே இல்லை என்பது உண்மை.
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் பொதுமக்கள் விலை வாசி உயர்வு, சட்ட ஒழுங்கு, வேலை வாய்ப்பின்மை, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களை காப்பாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமியால் தான் முடியும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.