அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடக்கம்!
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அத்துடன், டங்ஸ்டன் சுரங்க அனுமதியும், புயல், மழை நிவாரண உதவிகள் வழங்காதது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகள் குறித்து இன்றைய பொதுக்குழுவில் சில நிர்வாகிகள் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.