அதிமுகவிற்கு போட்டி திமுக தான்; பாஜக இல்லை -கே.பி. முனுசாமி
அதிமுகவிற்கு போட்டி திமுக தான், பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி. முனுசாமி பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்பொழுது பேசியவர், “பாஜகவிற்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது என்றால் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களை இங்கு போட்டியிட வைக்கட்டும். பாரதிய ஜனதா கட்சிக்கு தைரியம் இருந்தால் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவரையும் தமிழகத்தில் எந்த தொகுதியிலையாவது நிறுத்துங்கள். தமிழக மக்கள் உங்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவார்கள் என தெரிந்து கொள்வீர்கள்.
தமிழ்நாடு கல்வி சுகாதாரம் நீர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. பாஜகவின் ஆட்சி 17 மாநிலங்களில் நடைபெறுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு துறைகளில் தமிழகம் தான் விருது பெற்றுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள் அல்ல. இது எல்லாம் ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு தெரியாதா ?.
தமிழ்நாடு மக்கள் மிகவும் புரிதல் உள்ளவர்கள். அரசியல் ஞானம் உள்ளவர்கள். சிந்திக்க கூடியவர்கள். அதனால் தான் 50 ஆண்டுகாலம் தேசிய கட்சிகள் உள்ளே வரவிடாமல் திராவிட கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளத்தை வைத்து பேசிக்கொண்டிருப்பது பயனளிக்காது. வார் ரூமில் சமூக வலைதளத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் கதை பேசிக் கொள்ளலாம். பாஜக 300 தொகுதிகள் வரலாம் ஆனால் தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
எங்களுக்கு போட்டி திமுக மட்டும் தான். பாஜக கிடையாது. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டோம் என பாஜக கூறலாம் தேர்தல் நடைபெற்று வாக்குகள் என்னும் பொழுது தான் பாஜக எத்தனாவது இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பது அப்பொழுது தான் தெரியும். ஆகவே சமூக வலைதளங்களில் பேசி மக்களை ஏமாற்றுவது போல் உங்களை ஏமாற்றிக் கொள்கிறீர்கள்” என பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.