ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” பேரிடர் காலங்களில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேரிடர் பாதிப்புகளை அரசு தடுக்க முடியாது ஆனால் மக்களை தற்காத்துக் கொள்ள நடவடிக்கை வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்பு ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரம் இன்றி செய்தி வெளியிடுகிறது
கட்சியில் இருக்கும்போது அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பர். ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல.
அதிமுக என்பது அண்ணா திமுக மட்டுமல்ல, ஆன்ட்டி டி.எம்.கே என்பதாகும் அதிமுகவை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட்டார். ஒ.பி.எஸ் அதிமுக கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகளை பல்வேறு வழக்குகளாக நீதிமன்றங்களில் தொடுத்தார்
மத்திய மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஓபிஎஸ்ஐ இணைப்பது மூலம் மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தாயாராகவில்லை தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவுக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்க உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திமுகவிற்குள் ரகசிய கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அறிவாலயத்தில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். பாஜக கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும்போது பல்வேறு குழப்பங்கள் வந்துள்ளன
தமிழ் மொழி , தமிழ் இனம் குறித்து அண்ணாமலைக்கு என்ன தெரியும்? அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெரும். அதிமுகவில் குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார்கள். அதிமுக வரலாற்றில் இவ்வளவு வழக்குகளை சந்தித்ததில்லை. ஓ.பன்னீர்செல்வம் என்னும் தனிமனிதனின் சுயலாபத்திற்காக இவ்வளவு வழக்குகள் அதிமுக மீது போடப்பட்டது” ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.