Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்" - இபிஎஸ் அறிவிப்பு

வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
09:35 PM Jul 03, 2025 IST | Web Editor
வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Advertisement

வேலூரில் மூடப்பட்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை உடனடியாக திறக்கக் கோரி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஜூலை 8ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் போன்றவை அமைக்கப்படும்போது, அவை முழுமையான பயன்பாட்டிற்கு உகந்த வகையில் கட்டப்பட்டுள்ளதா? தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளதா? என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் திறப்புவிழா நடத்தப்பட வேண்டும்.

‘அதிசயம், ஆனால் உண்மை' என்பதுபோல், ஒரு வாரத்திற்கு முன்பு (25.6.2025) மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில்; உள்கட்டமைப்பு முழுமையாக ஏற்படுத்தாத நிலையில், எந்தவித வசதியும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு  கட்டடத்தைத் திறந்தார். இம்மருத்துவமனை திறந்த வேகத்திலேயே மூடு விழாவும் கண்டிருக்கிறது.

இம்மருத்துவமனை அவசர கதியில் திறக்கப்பட உள்ளதாக, ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டேன். முதலமைச்சர் திறந்துவைத்த மருத்துவமனை இப்போது மூடப்பட்டது ஏன்? ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனையை, விளையாட்டுப் பிள்ளைகளின் மைதானம் போல் நினைத்து இந்த திமுக அரசு நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

திமுக ஆட்சியின் அலட்சிய போக்கைக் கண்டித்தும்; பலகோடி செலவில் கட்டப்பட்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளோடு மீண்டும் முறையாக திறந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 8.7.2025 - செவ்வாய்க் கிழமை காலை 10 மணி அளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சி அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் N. சுப்பிரமணியன் தலைமையிலும்; வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் S.R.K. அப்பு முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்கள், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKDMKedappadi palaniswamiEPSTN Govtvellore
Advertisement
Next Article