Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” - எடப்பாடி பழனிசாமி

06:58 AM Mar 12, 2024 IST | Jeni
Advertisement

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பின்னர், மார்ச் 11-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சிஏஏ அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

“பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல..! – விஜய் கண்டனம்

அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
#CAAAIADMKBJPCitizenshipAmendmentActcondemnEdappadipalanisamyEPSImplementNarendramodiPMOIndiaUnionGovernment
Advertisement
Next Article