Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இன்று போராட்டம்!

07:48 AM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இன்று போராட்டம் அறிவித்துள்ளது.

Advertisement

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி),  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்),  பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்நிலையில்,  3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுமுழுவதும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து  வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் மதுரை சென்னை உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் , பார் கவுன்சில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அதிமுக இன்று போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ மத்திய பாஜக அரசால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும், மேலும் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுக-வின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் இன்று நண்பகல் 12 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக வழக்கறிஞர் நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags :
AIADMKCriminal LawsEdappadi palanisamyEPSNew Criminal Laws
Advertisement
Next Article