அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – தலைவர்கள் இரங்கல்!
கோவை அன்னூரை சேர்ந்த அமுல் கந்தசாமி (வயது.60) வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் உடலநலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் அமுல் கந்தசாமி இன்று (ஜூன் 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.க. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கட்சியின் மீதும், கட்சித் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அமுல்கந்தசாமி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கட்சிப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அமுல்கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
"வால்பாறை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளராருமான அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்"
முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
"உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் இன்று பிற்பகலில் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களாகவே கோவை மருத்துவமனையில் அவர் மருத்துவம் பெற்று வந்த நிலையில், அவர் முழு நலம் பெற்று வீடு திரும்புவார் என்று நம்பினேன். ஆனால், அதற்கு மாறாக அவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்"
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
"வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், அதிமுக கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"