“அதிமுக பங்காளி, பாஜக பகையாளி” - கிருஷ்ணகிரியில் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்களவைத்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ்.பாரதி பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,
உத்தரப்பிரதேசத்தில் யாரும் கல்வி கற்பதில்லை. அங்கு இந்தி படித்திருந்து வேலை கிடைத்திருந்தால் எதற்காக தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் உலகில் இன்று அதிகம் சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா தமிழ்நாட்டில் இரு மொழி கல்வியில் படித்த சுந்தர் பிச்சை. அமெரிக்காவில் அதிகளவில் சம்பளம் பெறுகிறார். இரு மொழியில் படித்தவர்கள் தான் சந்திர மண்டலம் சென்று வந்தனர்.
இந்தி படித்தால் பாணி பூரி மட்டும் தான் விற்க வேண்டும். அல்லது பிரதமர் மோடி போல் ரயிலில் டீ விற்க வேண்டும். ஆனால் இருமொழியில் படித்த நாம் இன்று ரயிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செல்கிறோம் என்றால், அதற்கு காரணம் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, பெருந்தலைவர் காமராஜர், அவர்கள் தேடிக் கொடுத்தது.
தமிழ்நாடு இன்று அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது. இதை மத்திய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவு தடுத்தாலும் தமிழகம் முன்னேறுகிறது. கல்வி, மருத்துவம், அறிவியல், போன்ற அனைத்து துறையிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதை எப்படி முறியடிக்கிறது என்பதற்காகத் தான் இந்தியை மத்திய அரசு திணிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதுபோல மக்களவைத் தொகுதியை குறைக்க நினைக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 22ஆம் தேதி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறு சீரமைப்பு வந்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதை அரசியல் கட்சிகளிடம் விளக்கி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுத்து அதற்காக
அம்மாநில முதல்வர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் பாவம். ஒரு இக்கட்டான நிலைமையில் உள்ளார். எந்த பக்கம் போவது என குழப்பத்தில் உள்ளார். திமுகவை பொறுத்தவரை அதிமுக பங்காளி கட்சி, ஆனால் பாரதிய ஜனதா கட்சி நமக்கு பகையாளி கட்சி. பகையாளியை விரட்ட முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார்.
1968ல் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைத்த போது இரு மொழி கொள்கை கொண்டு வந்தார். இன்று வரை அதுதான் நடைமுறையில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு காங்கிரஸ் கட்சி பென்ஷன் வழங்கியது. அதுபோல் தமிழகத்தில் தமிழ் மொழிக்காக தமிழ் வளர்ச்சிக்காக போராடியவர்களுக்கு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவக் கல்லூரி, பொறியியில் கல்லூரியில், ஒரு சில இட ஒதுக்கீடு கொண்டு தந்தார்.
அந்த ஒதுக்கீட்டில் தமிழறிஞர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட
ஒதுக்கீட்டில் மருத்துவர் படிப்பை படித்தவர் தான் குமரி ஆனந்தன் மகள் தமிழிசை
சௌந்தரராஜன். அதனை மறந்து நன்றி இல்லாமல், எந்த தமிழை படித்து மருத்துவம் படித்தாரோ அந்த தமிழுக்கு துரோகம் செய்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் இங்கு படித்தார்கள் என்றால், திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் இவர்கள் எல்லாம் மாடு மேய்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள்” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.