"அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை" - டி.டி.வி.தினகரன்!
அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
"அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அதுபற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பம். ஒரு சில சுயநலவாதிகளின் எண்ணத்தால் ஜெயலலிதாவின் கட்சி அழிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
இதையும் படியுங்கள் : அனுமதி பெறாமல் செயல்பட்ட திருமண மஹால் – உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ஆனால் அதிமுகவுக்கு 2019ம் ஆண்டில் 20 தொகுதிகளில் பெற்ற வாக்கு விகிதம் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக தங்களது வேட்பாளர்களை நிறுத்தியது. என்றாலும் இதையெல்லாம் கடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.50 சதவீதம் வாக்கு விகிதத்தைப் பெற்றுள்ளது. வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு இருந்த எதிர்ப்பு இப்போது இல்லாததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களிக்கின்றனர். ஆனால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்காததால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்துள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.