அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.