அதிமுக பொதுக்குழு விவகாரம் - இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சார்ந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தீர்ப்பளித்தது.
மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எவரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக “கேவியட்” மனுவை எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வழக்கை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து இபிஎஸ் தரப்பு தற்போது உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த வழக்கை ஒத்திவைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.