பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக மூத்த தலைவர்கள் பலரும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
அதிமுக — பாஜக உடன் முக்கிய கட்சிகள் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கூறிய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) நடைபெறுகிறது. இதில், சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 5000 பேர் பங்கேற்ற உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, சுமார் 10,000 பேருக்கு அசைவ உணவு தயார் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.