அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? #EPS விளக்கம்!
மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை பற்றி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எப்படி விமர்சிக்க முடியும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், வீரப்பம்பாளையத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று அனைவரும் துடிக்கின்றனர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதாவுக்கு பிறகும் சரி, நிறை திட்டங்களை தந்து நிறைவேற்றப்பட்டு மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக அதிமுக உள்ளது. இதனால் அதிமுகவை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும்.
அதனால் மற்ற கட்சிகள் அதிமுகவை பற்றி பேசவில்லை என்று ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையான திமுக ஆட்சியில் ஒரு துறை மட்டுமல்ல பல துறைகளில் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக இவையெல்லாம் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணியில் பங்கு என அறிவிப்பு வெளிட்டு இருக்கிறார்கள். அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சி வெளியிட்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றபோது கூட்டணியில் பிளவு என்று பார்க்க வேண்டியது தானே.
இதையும் படியுங்கள் : ChennaiGrandMasters2024 | சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – டிக்கெட் புக்கிங் தொடக்கம்!
3 ஆண்டு காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை. மக்கள் பிரச்னைக்காக எந்த போராட்டமும் செய்யவில்லை. அண்மை காலமாகதான் இதை எல்லாம் அறிவித்து வருகின்றன. இதனால் தான் அவர்களுடைய நடவடிக்கையை வைத்துதான் கூட்டணியில் பிளவு இருப்பதாக தெரிவிக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கே வன்முறை நடைபெற்று வருகின்றன. வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், பிரச்னை செய்தவர்களிடம் அமைதியாக போங்க என தட்டி கேட்கிறார். அதற்காக அவரது வீட்டின் கூரை மீது ஏறி உடைத்து, உள்ளே இருந்த அவரை அடித்து உதைக்கிறாங்க. எனவே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.
எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதுபோல்தான் பொதுக்குழு முடிவின் அடிப்படையில் நீக்கப் பட்டவர்களுக்கு அதிமுகவில் இனி இடம் கிடையாது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.