For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

04:48 PM Apr 15, 2024 IST | Web Editor
“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை ”   ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
Advertisement

இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

பொள்ளாச்சி மக்களவைதொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து
ஆத்துப்பாலம்,  சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின்
தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஜவாஹிருல்லா பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சி மக்களை வஞ்சிக்க கூடிய ஆட்சி, ஒவ்வொரு தரப்பு மக்களையும் பலிவாங்க கூடிய ஆட்சியாக இருக்கின்றது.  மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது திமுக இடம்பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இஸ்லாமிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டது.  அந்த அறகட்டளை மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் முதல் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்கள் வரை உரிமை தொகை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் மோடி ஆட்சியில் சில மாதங்களில் அந்த அறக்கட்டளையை முற்றிலுமாக மூடி கல்வி உதவித்தொகை தருவதை ரத்து செய்துவிட்டார்கள்.  இது தொடர்பாக சட்டசபையில் நான் பேசும் போது மோடி அரசு நிறுத்திய உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.  அதனை ஏற்று முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் கல்வி ஆண்டு முதல் உதவித்தொகையை வழங்கும் என வாக்குறுதி அளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் மோடி அரசு கல்வி உதவித்தொகையை நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக.  ஆனால் இன்று பாஜகவுடன் உறவை முறித்து விட்டோம் என நாடகம் ஆடுகிறார்கள்.  பாஜக கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்தவர்கள் அதிமுகவினர் என்பதை மறந்துவிடாதீர்கள்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, தடியடி நடத்தியது அப்போதைய அதிமுக அரசு.  ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது திமுக ஆட்சி என்பதையும் மறந்துவிட கூடாது.  ஜனநாயகம் செழித்தோங்க வேண்டும்,  இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் மோடி அரசு நிறுத்திய கல்வி உதவித்தொகைகளை நாங்கள் அளிப்போம் என கூறியுள்ளார்கள்.  இதற்கு ஆட்சி மாற்றம் இந்த நாட்டுக்குத் தேவை.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.

Tags :
Advertisement