அதிமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு!
அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள் : 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
இந்நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அண்மையில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு எஸ்.டி.பி. ஐ கட்சி தலைவருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை அதிமுக ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கூட்டணியை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து இன்று மாலைக்குள் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.