#AIADMK | அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது!
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் நேற்று (நவ. 10) இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலில் அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதல் ஈடுபட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, அமமுக உறுப்பினர் பழனிசாமி, ஒபிஎஸ் அணியை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன், அஜய் உள்ளிட்ட 4 பேரை சேடபட்டி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.