“அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது” - டிடிவி தினகரன் பேட்டி!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“திமுகவும், எடப்பாடிபழனிச்சாமியும் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த நினைத்தனர். கட்சியை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா? எடப்பாடி பழனிச்சாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது. பழனிச்சாமியின் நான்கரை ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும், திமுக திருந்தி இருக்கும் என்றும்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் திமுக 90% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம் ஆளும் கட்சியினரின் உதவியுடன் நடைபெறுகிறது. போதை மருந்து புழக்கங்களை இந்த ஆட்சி வேடிக்கை பார்க்கிறது.
பல விசித்திரமான நிகழ்வுகளெல்லாம் இந்த ஆட்சியில் நடக்க இருக்கிறது. வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர். திமுகவிற்கு எதிராகவும், துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் கட்சி பாஜக அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும். அதிமுக 40 தொகுதிகளிலும் முன்றாம் இடம்தான் பிடிக்கும்”
இவ்வாறு தெரிவித்தார்.