இன்று வேளாண் பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு!
இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144பக்கம் நிதி நிலையை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட்டை உரையை வாசித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.