"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - உறுதிபட அறிவித்த அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை செய்யும் முகாம் ஆகியவை நடைபெற்றது இதில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்
அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு குறித்து கூறிய கருத்துக்களுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்திருக்கிறார்.
திமுகவின் வேர்கள் மிக ஆழமானவை என்றும், அதை அசைக்க யாராலும் முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதை அமித் ஷாவால் கூட கண்டறிய முடியாது என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பிறகு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். இதை எந்த அமித் ஷாவாலும் தடுக்க முடியாது என்றும், ஏற்கனவே ஸ்டாலின் முதல்வராவதில் பல தடைகள் இருப்பதாக கூறப்பட்ட போதும், அவற்றை தகர்த்தெறிந்து அவர் முதலமைச்சரானார் என்றும் ரகுபதி குறிப்பிட்டார். அதேபோல், உதயநிதியும் முதல்வராவார் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை விசாரித்து, மூன்று மாதங்களில் தீர்ப்பு அளிப்பதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்புகள் இல்லை என்றும், அப்படியே நிறைவேற்றப்பட்டாலும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்த சட்டம் நிலை குழுவிற்கு மட்டுமே சென்றுள்ளது என்றும், நிறைவேற்றப்பட்ட பிறகு இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜக எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதற்காக இத்தகைய சட்டங்களை கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியைக் கலைத்து, குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர பாஜக முயல்வதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார். அவர்களின் இந்த முயற்சி பகல் கனவு என்றும், அவர்களுக்கு தமிழக நிலவரம் தெரியாது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் பாஜக-விற்கு எப்போதும் வெற்றி கிடைக்காது என்றும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக 2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் திமுக தான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.
இயற்கை வளங்கள் கொள்ளை குறித்து பாஜக வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் அதிகாரம் உள்ளது என்றும், தமிழகத்தில் இருந்து எந்தவொரு இயற்கை வளமும் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை என்றும் கூறினார். அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறித்து, வழக்கு தொடர்ந்த உடனேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்றும், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் வலுவானவை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், 2026-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார் என்றும், ஆனால் முதலமைச்சர் யார் என்று சொல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் அமராது என்பதால், முதலமைச்சர் யார் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்று அவர் கூறினார்.