அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் தோல்வியை சந்தித்த பாஜக!
மக்களவைத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்தில் நடைபெற்ற இடைதேர்தலிலும் பாஜக தோல்வியடைந்துள்ளது.
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் , தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த நிலையில், இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்தில் பாஜக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட லக்பத் சிங் புடோலா 27,696 வாக்குகள் பெற்ற நிலையில், அவர் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான ராஜேந்திர பண்டாரியை விட 5,095 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும் பாஜகவில் இணைந்தாா். இதனால், இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.