அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் - கோடநாட்டில் வி.கே.சசிகலா பேட்டி!
அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும் எனவும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும் எனவும் வி.கே.சசிகலா தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ஏழு வருடங்கள் கழித்து முதல் முறையாக சசிகலா கோடநாடு வந்தடைந்தார். அப்போது அவர் கூறியதாவது,
“கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்து கூட எதிர்பார்க்கவில்லை. மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உயிரிழந்த ஓம் பகதூர் என்ற தொழிலாளி நீண்ட காலமாக, சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார்.
இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையை பெற்று தருவார் என நம்புகிறேன். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக கோடநாடு வந்துள்ளேன். விரைவில் ஜெயலலிதாவிற்கு கோடநாட்டில் சிலை திறக்கப்படும்.
அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும். மேலும் அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு தர வேண்டும்” என தெரிவித்தார்.