மாணவர்களை வரம்பு மீறி தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!
அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை இழுத்து போட்டு தாக்கியதால் கைதான நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினார். அப்போது டிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்க மாட்டீர்களா என்றார். மேலும் அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றார்.
உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை அடித்தார், அதிலும் பேருந்து மீது ஏறிய ஒரு பள்ளி மாணவனை சரமாரியாக அடித்தார். மேலும் பள்ளி பேட்ச்சையும் காட்டி அடித்தார். மாணவர்களை நாய், ஏன்டா அறிவில்ல என அழைத்து கடுமையாக கத்தினார். அது படிக்கட்டில் யாரெல்லாம் நிற்கிறார்களோ அவர்களை எல்லாம் இறக்கிவிட்டார்.
மேலும் கன்டக்டரிடம் ஏன் நீங்கள் இதையெல்லாம் கேட்க மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனாவின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பின. மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை அவருக்கு யார் கொடுத்தது என்ற ரீதியில் நெட்டிசன்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களை தாக்கியதாக ஒரு வழக்கும், டிரைவர் , கன்டக்டரை அவதூறாக பேசியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய வாரண்ட் எங்கே என கேட்ட ரஞ்சனா நாச்சியாரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவாகிவிட்டதால் வாரண்ட் தேவையில்லை என கூறியபடி போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா ஸ்ரீபெரும்பதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் முன்னிலையில் ரஞ்சனா தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதில், மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார். தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை அடித்தார். உயிர் சேதத்தை தவிர்க்கவே தாய் போன்று வாக்குவாதம் செய்துள்ளார். படியில் பயணம் செய்தவர்களை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் காவல் நிலையத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். பொது சேவையின் அடிப்படையிலே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டார். ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் குற்றங்களை மறைக்கவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சனாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது நிபந்தனை ஜாமீன் கேட்டு வாதத்தை நிறைவு செய்தனர்.
காவல்துறையினர் வீடியோ ஆதாரத்தை நீதிபதியிடம் வழங்கினர். இதனை அடுத்து, ரஞ்சனாவின் வாதம் தொடங்கிய நிலையில், இப்படி படியில் மாணவர்கள் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள் இதை நீங்கள் கேட்க மாட்டீர்களா என ஓட்டுனரிடம் கேட்டேன். அதற்கு ஓட்டுனர் இதை எல்லாம் நான் பார்த்து ஓட்ட மாட்டேன் என்று கூறினார். நடத்துனரிடம் கேட்டபோது அவர் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
இத்தனை பசங்க படியில தொங்கிகிட்டு போறாங்க இவங்களுக்கு எதாவது உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது என்று தான் ஒரு ஆதங்கத்தில் பேசிட்டேன். நம்ம கண்ணெதிரே ஒரு விபத்து நடந்து விடக்கூடாது நோக்கத்தோடு பசங்க வீட்டுக்கு நல்லபடியாக போகணும் தான் இப்படி நடந்துகிட்டேன்.
நான் வரம்பு மீறி பேசியது தவறுதான் மன்னிச்சிடுங்க ஐயா. நான் தவறாக பேசியது எனது நோக்கம் அல்ல. விபத்து தவிர்க்கணும் பசங்க சேப்டியா வீட்டுக்கு போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் பேசினேன் என்று ரஞ்சனா விளக்கம அளித்தார்.
இதனை அடுத்து, ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஸ்ரீபெரும்பதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராம்குமார் உத்தரவிட்டார். அதோடு, 40 நாட்கள் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.