For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

04:43 PM Jun 02, 2024 IST | Web Editor
“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்”   முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Advertisement

“வரலாற்றை திரித்துக் கூறுவதை நடிகர் பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  “இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொழுது எனக்கு பேசுவதற்கு பேச்சு வரவில்லை. இதனை பார்க்கும் பொழுது நான் கண் கலங்கினேன். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. என்னை அன்பாக பார்த்த ஒரு மனிதன் அவர். 50% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வரும் நிலையில் எப்போதோ 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி” என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

“வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் பிரகாஷ்ராஜ், 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு‌ வரைமுறைப்படுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமூக நீதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார். பின்னர்‌ சட்டமன்றத்தில் அவர் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன்.

இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனி சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து வலியுறுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : "மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை"– இளையராஜா பேட்டி!

பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24, அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் கி.வீரமணி  ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார்.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது. மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு. இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement