'கேப்டன்' ஆன 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’...!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் என 71 வருட தனது வாழ்நாளில் பல தடங்களை பதித்தவர் விஜயகாந்த். பிறப்பு முதல் இறப்பு வரை அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்...
'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி'
இது தான் விஜயகாந்தின் இயற்பெயர். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதுரை திருமங்கலத்தில் கே.என்.அழகர்சாமி நாயுடு, ஆண்டாள் அழகர்சாமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னைக்கு வந்து பல சிரமங்களை கடந்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
1990ம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதாவை மதுரையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது திரையுலக தொடக்கம் முதல் அரசியல் பயணம் பற்றி விரிவாக காண்போம்.
திரையுலக பயணம்
நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். பின்னர் 1979ல் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்போது விஜயராஜ் என்ற தனது பெயரில் ’ராஜ்’ என்னும் வார்த்தையை நீக்கி ’காந்த்’ என்னும் வார்த்தையுடன் இணைத்து 'விஜயகாந்த்' என தனது பெயரினை மாற்றி அமைத்துக்கொண்டார். இவரது நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்று தந்தது.
பிரபலம் / அங்கீகாரம்:
விஜயகாந்த் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிராகவும் தேசப்பற்று படங்களாக இருக்கும். இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 'புரட்சி கலைஞர்' என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் 'கேப்டன்' என்றே அழைக்கின்றனர்.
இவரது 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானார். விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார்.
விருதுகளுக்கு பெருமை சேர்த்த விஜயகாந்த்
இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி - தமிழக அரசு விஜயகாந்துக்கு எம் ஜி ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009), கலைமாமணி விருது (2001) ஆகிய விருதுகளை வழங்கி சிறப்பித்தது. மேலும் இந்திய அரசால் 'சிறந்த குடிமகனுக்கான' விருதும் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத் தலைவர்
நடிகர் விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பல கோடிகள் கடனில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தினார்.
அரசியல் பயணம்:
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாவதவரான விஜயகாந்த், அரசியலிலும் தடம் பதித்தார். "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்ற பெயரில் 2005-ஆம் ஆண்டு தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்ற இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தார். மேலும் அந்த தேர்தலில் அவர் மட்டும் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எதிர்கட்சித்தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்தார்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை(டிச.28) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி அவரது அயரத உழைப்பும், ஆற்றிய பணிகளும் இன்றியமையாதது.