“மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” - விவசாயிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிப்பு!
காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மழையால் சேதமடைந்த விளைநிலங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு, நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இன்று வரையிலும் வெள்ளநீர் வடியாமல் பல பகுதிகள் மழைநீரில் மிதந்து வருகின்றன. மேலும் இக்கனமழையால், விவசாயம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. பயிரிடப்பட்ட அனைத்து விளைநிலங்களும் நீரில் மூழ்கின. இப்பயிர் சேதங்கள் குறித்து வேளாண்துறை மூலம் குழு அமைக்கப்பட்டு, அனைத்து வட்டாரங்களிலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன்குளம் மற்றும் சிவலிங்கபுரம் பகுதிகளிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உலக்குடி
பகுதிகளிலும் வேளாண்துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டனர். பின் பயிர்ச்சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து விரைந்து அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த ஒருசில பகுதிகளின் பயிரிடப்பட்ட பரப்பளவு ;
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை,
காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் நெற்பயிர்கள்
23,02,14 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 53,06,21 ஹெக்டேர் பரப்பிலும்,
பயறு வகைகள் 5,637 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 4,784 ஹெக்டேர்
பரப்பிலும், பருத்தி 15,552 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 893 ஹெக்டேர்
பரப்பிலும் ஆக மொத்தம் 1,03,701 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.