For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்!

08:39 PM Jul 01, 2024 IST | Web Editor
“மத மோதல்களை உருவாக்குவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”   உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டம்
Advertisement

இந்து முஸ்லீம் மோதல்களை உருவாக்கும் விதமாக கீழ்தரமான முகநூல் பதிவுகளை வெளியிட்டவரும் பாஜக மாநில நிர்வாகி குருஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த குருஜி இந்து பாஜக மாநில பொறுப்பில் இருக்கிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகிவரும் சூழலில் அவர்களுக்கிடையே பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக குருஜி முகநூல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இஸ்லாமிய மத போதகர்கள், தர்கா, ஹஜ்ரத் போன்றவை குறித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் காழ்ப்புணர்வுடன் தவறாக வரலாறுகளை சித்தரித்து, கேவலமான பதிவுகளை முகநூலில் பதிவு செய்து வருகிறார். இது இஸ்லாமியர்களை உளரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் புண்படுத்தியுள்ளது, காயப்படுத்தியுள்ளது. இவர் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக தொண்டி காவல் நிலையத்தில் ஜூன் 14-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ் தரமான முகநூல் பதிவுகளை வெளியிட்டுவரும் பாஜக பிரமுகர் குருஜி மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இந்த வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது நேற்று (ஜூன் 30) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி முதல் தகவல் அறிக்கையை FIR தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் கொடுத்து பல மாதங்களாகி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்து, முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை உண்டு பண்ணும் விதமாக மிகவும் கேவலமான பதிவுகளை முகநூலில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்று கூறி அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஆவணங்களை பார்த்த நீதிபதி, “எவ்வாறு இதுபோன்ற மோசமான பதிவுகள் பதிவு செய்யப்படுகிறது. பார்க்கவே அருவருக்கத்தக்க பதிவுகளை இவர் பதிவு செய்து வருகிறார். ஏன் இவ்வளவு கால தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறை அதற்கு எதிர்மாராக குண்டர் சட்டங்களை பயன்படுத்தி வருகிறது. எனவே இந்த வழக்கை வேறு விசாரணை பிரிவுக்கு ஏன் மாற்றக்கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதுபோன்று மத மோதல்களை உருவாக்கும் நபர்களை விசாரணை செய்வதற்கு வேறு ஏதேனும் பிரிவு உள்ளதா? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags :
Advertisement