மதுரையில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் அளித்து சாதனை - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளதாகவும், மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல, தலைமுறை சார்ந்தது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில், ரூ.15 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக்கடன் முகாம் தேசிய அளவில் பெரும் சாதனையை படைத்துள்ளதாகவும், இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு தொகை ஒரே நாள் முகாமில் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்:
"இந்தியாவிலேயே முதன்முறையாக போட்டித் தேர்வுக்கான படிப்பு வளாக பூங்காவை
ஏற்படுத்தியது மதுரையில் தான். கடந்த 2021-ம் ஆண்டு முதல் வருட வருடம் கல்வி கடன் கொடுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் கொடுக்கப்பட்ட கல்வி கடனை விட மதுரை மாவட்டத்தில் மட்டும் கொடுக்கப்பட்ட கல்வி கடன் அதிகமாக உள்ளது என பெருமை கொள்கிறேன்.
இந்த கல்விக் கடன் முகாம் நடத்துவதற்கு காரணம் என்னவென்றால் மாணவ மாணவிகள்
தங்களது கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் பாதியிலேயே தங்களது படிப்பை
நிறுத்தி விடுவார்கள் அல்லது கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு வெளியே வட்டிக்கு
கடன் வாங்கி தங்களது கல்வி கட்டணத்தை செலுத்துவார்கள். வெளியே வட்டிக்கு கடன்
வாங்கி தங்களது கல்வி கட்டணத்தை செலுத்தும் மாணவ மாணவியரின் குடும்பம்
கடைசியில் வட்டியை செலுத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் மீள்வதற்காகவே இதுபோன்று கல்வி கடன் சிறப்பு
முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு
அவர்கள் படித்து முடிக்கும் வரை வட்டி கிடையாது அந்த வட்டியை மானியமாக மத்திய
அரசு கொடுக்கிறது.
மாணவர்களுக்கான கல்வி கடனில் வட்டியை மத்திய மாநில அரசுகளை ஏற்றுக்கொண்டு அதனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினராக கோரிக்கை வைக்கிறேன். எனவே இதுபோன்று வங்கியில் மூலம் கல்வி கடன் பெற்று மாணவ மாணவிகள் தங்களது கல்வியை பயின்று தங்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும்” என பேசினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில், “மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.15 கோடி கல்விக்கடன் வழங்கி இந்திய அளவில் சாதனை. மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்ததல்ல, தலைமுறை சார்ந்தது. மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கும் செயலில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும். அதற்கு மதுரை முன்னுதாரனமாக அமையும்.” என பதிவிட்டுள்ளார்.