திடீரென வெடித்து சிதறிய ஏசி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன் மனைவி !
ரிமோட்டில் அணைத்து வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி (ஏசி) மாலையில் திடீரென வெடித்து சிதறிய சம்பவத்தில் அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை மாவட்டம், யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள ஐயப்பன் நகர் பகுதியில் வசிக்கும் செந்தில் குமார் (வயது 57). இவர் தனியார் (மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் (பிஆர்ஓ) பணி செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன். இவரது மகன் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டில் வழக்கம்போல் ஏசி ரிமோட் மூலம் அணைத்து விட்டு தூங்க சென்று உள்ளனர். அதன் பிறகு வழக்கமான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வீட்டில் இருந்த ஏசி வெடித்துச் சிதறியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிலின் மேல் இருந்த பொருட்கள் பேன், மெத்தை முழுவதுமாக எரிந்து வீடு முழுவதும் கரும்புகையாய் காணப்பட்டது.
மேலும் கணவன் செந்தில் குமார், மனைவி தேவி இருவரும் ஏசி வெடித்த சத்தம் கேட்டு அலறி அடித்து அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரும்புகையை அணைத்தனர்.