‘ஏஞ்சல் வரி’ விதிப்பு முறை ரத்து! ஸ்டார்ட் அப் துறையில் உள்ளவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
மத்திய பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி விதிப்பு முழுவதுமாக நீக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த ஏஞ்சல் வரி என்றால் என்ன? தற்போது ஏஞ்சல் வரி விதிப்பு முறை ரத்தாகி உள்ள நிலையில் அதன் மூலம் யாருக்கு லாபம் கிடைக்கிறது? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
நம் நாட்டில் ஏராளமான வரி விதிப்பு முறைகள் உள்ளன. வருமான வரி, ஜிஎஸ்டி வரி உள்பட பல வகைகளில் மக்களாகிய நாம் வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் தான் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றும் செய்யப்படவில்லை. இதனால் நடுத்தர மாத சம்பளதாரர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிவிப்பில், ‛‛அனைத்து வகை தொழில் முதலீட்டுக்கான ஏஞ்சல் வரி என்பது நீக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார். இந்த ஏஞ்சல் வரி விதிப்பு முறை என்பது கடந்த 2012ம் ஆண்டு முதல் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் நோக்கம் என்பது தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணமோசடியை தடுப்பதாகும். இந்த நிலையில் தற்போது ஏஞ்சல் வரி விதிப்பு முறையை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்து அறிவித்துள்ளது.
அதாவது இந்த ஏஞ்சல் வரி விதிப்பு முறையின் மூலம் தனியார் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் துறையில் உள்ளவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது பொதுவாக தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களின் முதலீடுகளைப் பங்கு முதலீடாக வெளிநபர்களிடம் பெறுகின்றனர். இந்த முதலீடுகள் நியாய விலையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதிகப்படியான தொகைக்கு மட்டும் வரி விதிக்கப்படும்.
வருமான வரிச்சட்டத்தின் 56 பிரிவு 2 ன் கீழ், பிற ஆதாரங்களில் இருந்து பெறும் வருமானம் என்ற பெயரில் 30.9 சதவீதம் வரை இந்த வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் வளர்ச்சியடைந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இந்த வரி விதிப்பு முறை என்பது பொருந்தும். இது தான் ஏஞ்சல் வரி விதிப்பு முறையாகும். தற்போது இது நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஸ்டார்ட்அப் துறைகளில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.