ஆவின் பால் கலப்படமற்றது - அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஈரோட்டில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் பால் கலப்படமற்றது என்றும், பாலின் கொள்முதல் விலை விரைவில் உயரும் என்றும் உறுதியளித்தார்.
ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் செய்ய முடியாது. எந்த சமரசமும் இன்றி விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.
ஆவின் பாலின் தரம் சிறப்பாக உள்ளது. உணவுப்பொருள் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் அரசு நிறுவனமாக இருப்பதால், தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது.
விவசாயிகள் நலன் கருதி பாலுக்கான கொள்முதல் விலை ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டும் ஊக்கத்தொகையாக ரூ.25 கோடி பெற்றுள்ளனர். மேலும், விலை உயர்த்துவதற்கான கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆவின் பால் கொள்முதல் தற்போது 36 லட்சம் லிட்டராக உள்ளது, இது விரைவில் 46 லட்சம் லிட்டராக உயரும். பால் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ரூ.1.04 கோடி மதிப்பில் 4 குளிரூட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால்பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ரூ.5,000 கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு 10 நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட தரமற்ற பாலித்தீன் அல்ல. எனினும், கோரிக்கையை ஏற்று பாட்டில்களில் பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பீகாரில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தின் நிலைமைகளை பார்த்து திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்தார்.