#AAP | “கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும்” - முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி பேட்டி!
அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் எனவும், டெல்லி மக்களைப் பாதுகாத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவது தான் ஒரே இலக்கு என டெல்லி முதலமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சுமார் 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார். அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று (செப். 16) அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதித்தனர். இதையடுத்து, இன்று (செப். 17) மாலை 4 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணிக்கு புதிய முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை முதலமைச்சராக நான் ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுவேன் என்பதை டெல்லி மக்களுக்கும், சக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும். இப்போது என்னுடைய ஒரே இலக்கு, டெல்லி மக்களைப் பாதுகாத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவதுதான்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.