" #AAP-க்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுதான் பாஜகவின் இலக்கு" - அரவிந்த் கெஜ்ரிவால்!
மக்களுக்கான பணிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே பாஜகவின் இலக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். இவரை தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், இம்ரான் ஹுசைன் , சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், அதிஷி பல்வேறு வகை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவராக அறிவித்தார். அதன்படி, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நேற்று அறிவித்தார். இந்நிலையில், அதிஷியுடன் அரவிந்த் கெஜரிவால் நகரில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். சாலையை ஆய்வு செய்தபோது ஆம் ஆத்மி கடசியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்எல்ஏ திலீப் பாண்டே உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதையும் படியுங்கள் : TVK முதல் மாநாடு குறித்து ஆலோசனை! பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு!
அப்போது அரவிந்த் கெஜரிவால் கூறியதாவது :
"மக்களுக்கான பணிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே பாஜகவின் இலக்காக இருந்ததால், தான் சிறைக்கு அனுப்பட்டேன். நான் சிறையிலிருந்து திரும்ப வந்துவிட்டேன், நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று டெல்லி மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.சிறையிலிருந்தபோதும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருதேன். தற்போது 24 மணி நேரமும் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.