“தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன்!” - டிடிவி தினகரன் பேட்டி!
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இதனிடையே மார்ச் 20-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், ரவிக்குமார், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், பாஜக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று, பாஜக கூட்டணியை சேர்ந்த, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் உடனிருந்தனர். கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த டிடிவி தினகரன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
தேனி தொகுதி மக்கள் தங்களில் ஒருவனாக தன்னை பார்க்கின்றனர். தேனி மக்களவை தொகுதிக்கு என்ன நல்லத்திட்டங்கள் வேண்டுமோ அனைத்தையும் பிரதமர் மோடியிடம் பெற்றுக்கொடுப்பேன். தேனிக்கு அனைத்து நலத்திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் தான் வந்தது. அதே போல் தற்போது பிரதமர் மோடியிடம் அனைத்துக் கோரிக்கைகளையும் முன்வைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.