"திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்"- எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ”மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம்” சுற்றுப்பயணத்தின் 4 ஆம் கட்டமாக மதுரை திருப்பரங்குன்றம் மக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களை அதிமுக அரசு ஊக்குவித்தது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க டோக்கன்களை வழங்கி வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. மேயர் துணை இல்லாமல் மேயரின் கணவர் எப்படி வரியில் ஊழல் செய்திருக்க முடியும். மேயரின் கணவரை கைது செய்து வரி ஊழல் குறித்து திமுக அரசு கண் துடைப்பு நாடகத்தை நடத்துகிறது. அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மதுரை மாநகராட்சி வரி ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கட்டுள்ள நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.திமுக அரசுக்கு வேண்டப்பட்டவர்களை டிஜிபியாக நியமிப்பதற்காக டிஜிபி பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை. டிஜிபி நியமிப்பதில் குளறுபடி இருந்தால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் நான்கு முறை வெளிநாடு பயணம் சென்று வந்த பொழுது ஈர்த்துள்ள வெளிநாடு முதலீடுகள் என்ன? அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் முதலீட்டு மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் நிறுவப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மூன்று லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத் தொழில்துறை அமைச்சர் நான் வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை விமர்சனம் செய்துள்ளார். கலைஞர் கருணாநிதி தங்க தட்டில், வெள்ளி ஸ்பூனில் சாப்பிடலாம் நான் ஸ்பூனில் சாப்பிட கூடாதா?.
போதைப்பொருள் நடமாட்டத்தால் தமிழகப் பின்னோக்கி சென்றுள்ளது. மதுக்கடைகள் மூலமாக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் கூடுதலாக விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு 15 கோடியை திமுக அரசுக்கு கிடைக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது விற்பனை ஊழல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்பதை மட்டுமே சிந்திக்கிறார்."உங்களுடன் ஸ்டாலின்" 46 பிரச்னைகள் பிரச்னைகள் கண்டுபிடித்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதக்கிறது”
என்று பேசினார்.